சிறுவாணி அணை நீர்மட்டம் 37 அடியாக குறைப்பு

45 அடியாக உயர்ந்த நிலையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 37 அடியாக குறைத்த கேரள அரசின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.;

Update:2022-07-21 19:39 IST

45 அடியாக உயர்ந்த நிலையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 37 அடியாக குறைத்த கேரள அரசின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சிறுவாணி அணை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் 50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணை உள்ளது. இதில் இருந்து கோவைக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. அணையை கேரள அரசு பராமரித்து வருகிறது.

அதற்கான செலவை தமிழக அரசு கொடுத்து வருகிறது. மேலும் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அணைக்கு சென்று கண்காணித்து வருகிறார்கள்.

கேரளாவில் மழை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவில் சேதம் ஏற்பட்டது. இதனால், அணைகளில் முழு கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்குவது இல்லை என்ற முடிவின் படி சிறுவாணி அணையில் 42 அடி உயரத்துக்கு மேல் கேரள அதிகாரிகள் தண்ணீரை தேக்குவது இல்லை.

நீர்மட்டம் உயர்வு

இதனால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது 45 அடி வரை தண்ணீரை தேக்க அதிகாரிகள் சம்மதித்தனர். ஆனாலும் 50 அடிவரை தண்ணீரை தேக்க வேண்டும் என்று தமிழகம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. மேலும் படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்து கடந்த 17-ந் தேதி இரவு45 அடியை தொட்டது.

தண்ணீர் திறப்பு

இதற்கிடையே அணை மதகு பகுதியில் கசிவு ஏற்பட்டு உள்ளதாக கூறி 17-ந் தேதி இரவில் தமிழக அதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் கேரள அரசு அதிகாரிகள் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர்.

இதை அறிந்த தமிழக அதிகாரிகள் 18-ந் தேதி கேரள அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் கேரள அதிகாரிகள் செவி சாய்க்க வில்லை.

ஆனாலும் தமிழக அதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்தியதால் கடந்த 19-ந் தேதி இரவில் தண்ணீர் திறப்பதை நிறுத்தினார்கள்.

தண்ணீர் வெளியேற்றம்

சிறுவாணி அணையின் மெயின் ஷட்டர்கள் திறக்கப்பட்டு 3 நாட்களாக தண்ணீர் வெளியேறியது. இதனால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து 37 அடியானது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவைவிட மிக அதிகமாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

இதனால், 3 நாட்களில் மட்டும் அணையில் இருந்துஅதிக அளவில் தண்ணீரை கேரள அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர். தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை குறைந்து விட்டது. அணையில் 38.38 அடி தண்ணீர் உள்ளது.

கேரள அதிகாரிகள் தொடர்ந்து இதுபோன்று செய்துவருவதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக கேரள முதல்-மந்திரியை தொடர்பு கொண்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்