கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-07 22:15 GMT

பொள்ளாச்சி

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. காமினி தமிழகம் முழுவதும் பொது வினியோக திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோட்டூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மொசவம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சந்தேகத்தின் பேரில் மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது மூட்டைக்குள் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திவான்சாபுதூரை சேர்ந்த ராஜபாண்டி (வயது 41), அதே பகுதியை சேர்ந்த அவரது தம்பி பால்பாண்டி ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் கோட்டூர் சுற்று வட்டார பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையின்போது பால்பாண்டி அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ராஜபாண்டியை கைது செய்தனர். மேலும் 1,020 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையில் தப்பி ஓடிய பால்பாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கைதான ராஜபாண்டி மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்