விரைவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் எடப்பாடி பழனிசாமி போட்டோவுடன் புதிய உறுப்பினர் அட்டை...! புதிய/பழைய சட்ட விதிகள் சொல்வது என்ன?

வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.;

Update:2023-03-07 15:47 IST

சென்னை:

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அ.தி.மு.க.வில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த வரையில் அந்த பதவி அதிகாரம் மிக்க பதவியாகவே இருந்தது.

அவரது மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டார். இதன் பிறகு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வந்த நிலையில்தான் தற்போது அ.தி.மு.க. ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார்.

வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

முதல் நாள் மாவட்ட செயலாளர்களுடனும், மறுநாள் மாநில நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டங்கள் முடிந்த பின்னர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையில் தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி புகைப்படமும் உறுப்பினர் அட்டையில் இடம்பெறும் என்கிற புதிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

அ.தி.மு.க. நிறுவன தலைவரான எம்.ஜி.ஆர். கட்சியை ஏழை மக்களிடம் கொண்டு சேர்த்து வலுவாக்கினார். எம்.ஜி.ஆருக்கு பிறகு தலைமை பொறுப்பை வகித்த ஜெயலலிதா கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுவாக்கி அசைக்க முடியாத சக்தியாக மாற்றினார்.

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தி வருகிறார். இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் எடப்பாடி பழனிசாமியின் படமும் புதிய உறுப்பினர் அட்டையில் இடம்பெற இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று கட்சியின் தலைமை பதவியை முழுமையாக கைப்பற்றிய பின்னரே எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பிரிந்து சென்ற அ.தி.மு.க.வினரை மீண்டும் கட்சியில் சேர்க்க முனைப்பு காட்ட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரனை தவிர்த்து மற்ற அனைவரையும் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் பிரிந்து சென்றவர்களை அ.தி.மு.க.வில் சேர்க்கும் முயற்சிகளை கட்சியினர் செய்து முடிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் ஓ.பி.எஸ். அணியில் இருந்தும், தினகரன் கட்சியில் இருந்தும் மேலும் பல நிர்வாகிகள் விலகி விரைவில் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய/பழைய சட்ட விதிகள் சொல்வது என்ன?

பொதுச் செயலாளர் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்வதற்கான இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது.

11-07-2022 வரை அதிமுகவின் உறுப்பினராக இருந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும்.

பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய இருவரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஏற்கனவே பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே ஏப்ரல் மாத இறுதிக்குள் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடித்து கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க இருக்கிறார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவிகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தது இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் கட்சியில் சட்ட திட்ட விதிகள் மாற்றம் செய்யப்பட்டு பொதுச்செயலாளர் பொறுப்பு எவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற விதியும் மாற்றம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழைய சட்ட திட்ட விதிமுறைகள்

விதி 20அ : ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்

திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்

விதி - 20அ : கழகப் பொதுச் செயலாளர்

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதற்கு பதில் "கழகப் பொதுச் செயலாளர்" என்று மாற்றி அமைக்கப்பட்டு, விதி திருத்தப்படுகிறது.

பழைய சட்ட திட்ட விதிமுறைகள்

விதி 20அ பிரிவு -1

கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுபவர்கள், தேர்தல் நடைபெறும் நாளுக்கு முன்பாக, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருந்திடல் வேண்டும்.

திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்

விதி 20அ பிரிவு - 1

வரையறுக்கப்பட்ட தகுதிகளைப் கழக சட்ட திட்ட விதிமுறைகளில் | பூர்த்தி செய்துள்ள கழக உறுப்பினர்கள், பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிடத் தகுதி உடையவர் ஆவார்கள்.

a) கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் உறுப்பினர், கழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

b) கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் உறுப்பினர், தலைமைக் கழகப் பொறுப்புகளில் குறைந்தது தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

c) கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் உறுப்பினரின் பெயரை, கழக அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களில், குறைந்தது 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். மற்றும் கழக அமைப்பு ரீதியாக உள்ள 10 மாவட்டங்களில் குறைந்தது மாவட்டக் கழகச் செயாளர்கள் வழிமொழிய வேண்டும்.

மாவட்டக் கழகச் செயலாளர், ஒரு வேட்பாளருக்கு மட்டும் தான்

முன்மொழியவோ அல்லது வழிமொழியவோ வேண்டும்.

பழைய சட்ட திட்ட விதிமுறைகள்

விதி 20 அ பிரிவு - 2 :

கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்

விதி 20 அ பிரிவு - 2 :

பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பழைய சட்ட திட்ட விதிமுறைகள்

விதி - 20அ பிரிவு - 3

தேர்ந்தெடுக்கப்படும் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஐந்து ஆண்டுகளுக்கு இப்பொறுப்புகளில் நீடிப்பர்.

திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்

விதி - 20அ பிரிவு - 3:

தேர்ந்தெடுக்கப்படும் கழகப் பொதுச் செயலாளர் ஐந்து ஆண்டுகளுக்கு இப்பொறுப்புகளில் நீடிப்பார்.

பழைய சட்ட திட்ட விதிமுறைகள்

விதி 20அ பிரிவு - 4:

கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் கழக சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு, தங்கள் கடமைகளையும் பணிகளையும் பொறுப்புகளை வகிப்போர், இணைந்தே நிறைவேற்றுவர்.

திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்

விதி - 20அ பிரிவு - 4:

கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பை வகிப்பவர், கழக சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு, தனது கடமைகளையும், பணிகளையும் நிறைவேற்றுவார்.

பழைய சட்ட திட்ட விதிமுறைகள்

விதி - 20அ பிரிவு - 5:

கழகத்தின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆவர்.

திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்

விதி - 20அ பிரிவு - 5:

கழகத்தின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர் கழகப் பொதுச் செயலாளர் ஆவார்.

பழைய சட்ட திட்ட விதிமுறைகள்

விதி 20.அ பிரிவு 6:

கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அவைத் தலைவர், பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர்கள். மாவட்டச் செயலாளர்கள், நியமன உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டு தலைமைச் செயற்குழுவை அமைப்பர்.

திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்

விதி - 20.அ பிரிவு - 6:

அவைத் தலைவர், பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நியமன உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டு கழகப் பொதுச் செயலாளர் தலைமைச் செயற்குழுவை அமைப்பார்.

பழைய சட்ட திட்ட விதிமுறைகள்

விதி 20அ பிரிவு -7:

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்படும் செயற்குழு உறுப்பினர்களும், தலைமை கழக செயலாளர்களும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் வரையில் நீடிப்பார்.

இதற்கிடையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் விடுவிக்கப்பட்டாலோ இடைப்பட்ட காலத்தில் அதாவது புதிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வரையில் முந்தைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பதவியில் நீடித்து கட்சிப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்

விதி 20அ பிரிவு -7:

கழக பொதுச்செயலாளர் நியமிக்கப்படும் செயற்குழு உறுப்பினர்களும் தலைமைக் கழகச் செயலாளர்களும் அந்த பொதுச் செயலாளர் பதவிக்காலம் வரையில் நீடிப்பார்கள்.

இடைப்பட்ட காலத்தில் அதாவது பொதுச் செயலாளர் விடுவிக்கப்பட்டாலோ நீக்கப்பட்டாலோ செயல்படாத நிலை ஏற்பட்டாலோ அல்லது அப்பொறுப்பு காலியாகும் நிலை ஏற்பட்டாலோ புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளும் வரையில் இடைக்கால பொதுச் செயலாளர் ஒருவர் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார். இடைக்கால பொதுச் செயலாளர் கட்சியின் பொதுச் செயலாளர் பணிகளையும் கட்சி நிர்வாகத்தையும் தொடர்ந்து நடத்தி வருவார்.

இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்ய வேண்டி முந்தைய பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக செயலாளருக்கு உடனடியாக பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. மேற்படி கூட்டம் 30 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும்.

தற்போது கட்சி இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் தேர்வுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவரை தவிர வேறு யாரும் போட்டியிடாத சூழல் தற்போது கட்சிக்குள் உள்ளதால் அவரே விரைவில் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். அதற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டம் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்