கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளா , தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது

Update: 2023-06-08 09:06 GMT

கோழிக்கோடு,

அந்தமான் பகுதியில் மே 20-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது. கேரளாவில் வழக்கம்போல ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. முந்தைய, பிந்தைய 4 நாட்களில் பருவமழை தொடங்கினாலும், அது வழக்கமான காலத்தில் தொடங்கியதாகவே கருதப்படும்.

எனினும், ஜூன் 5-ம் தேதிக்கு மேல் பருவமழை தொடங்கினால், தாமதமாக தொடங்கியதாக அறிவிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு தாமதமாக தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரபிக்கடலில் உருவான 'பிபோர்ஜோய்' புயல் பாகிஸ்தான் நாட்டின் கராச்சிக்கு தெற்கே, ஓமன் நோக்கி நகர்ந்து விட்டது. இதன் காரணமாக லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்பட்டது. அதற்கேற்ப மாலத்தீவு, லட்சத்தீவு முதல் கேரளா கடற்கரை வரை நிலையான மேகமூட்டம் ஏற்பட்டது. இது தென்மேற்கு பருவமழை ஆரம்பம் ஆகி விட்டதை காட்டுகிறது.

கடந்த 1-ந் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கி உள்ளது. தென்மேற்கு பருவமழை இயல்பான அளவுக்கு பெய்யும். தமிழகத்திலும் அடுத்த 48 மணி நேரத்தில் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன. ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதற்கு ஏற்ப கேரளா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. ஆலப்புழா, கொல்லம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் இன்று மழை பெய்து வருகிறது.

கேரளாவில் ஒன்பது மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்