பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது

Update: 2023-05-12 19:00 GMT

பழனியில், முருகன் கோவிலின் உபகோவிலாக பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழாவின் கொடியேற்றம், தேரோட்டம் உள்ளிட்டவை இந்த கோவிலில் வைத்தே நடைபெறுகிறது. எனவே இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளன்று நடராஜர்-சிவகாமி அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று சித்திரை திருவோண நட்சத்திரம் என்பதால் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு நடராஜர்-சிவகாமி அம்மன், விநாயகர், அஸ்திரதேவர் ஆகியோருக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம், 16 வகை தீபாராதனை நடைபெற்றது.

அதன்பின்னர் நடராஜர்-சிவகாமி அம்மன் சப்பரத்தில் நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்