வெட்டிவேர் அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர்
வெட்டிவேர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பலித்தார்.;
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகரில் உள்ள விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், வெப்பம் தணிந்து தேவையான அளவிற்கு நல்ல மழை பெய்து நவதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வகை வேளாண் பொருட்களும் நல்ல விளைச்சல் காணவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், எந்த வகை நோய்த்தொற்றும் பரவாமல் உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவர் ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 1,001 முறை ராம நாம ஜெபம், குங்குமம் மற்றும் உதிரிப்பூ அர்ச்சனை நடந்தது. இதில் ஆஞ்சநேயர் வெட்டிவேர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.