நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தங்க சக்கரத்திற்கு சிறப்பு பூஜை

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் தங்க சக்கரத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-10-20 19:00 GMT

ராமேசுவரம்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-வது நாளான நேற்று காலை கோவிலின் கொலுமண்டபம் முன்பாக அம்பாளின் தங்க ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டது. தொடர்ந்து தங்க ஸ்ரீ சக்கரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து குங்குமம் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. பூஜைகளை சர்வ சாதகம் சிவமணி தலைமையில் உதயகுமார் குருக்கள் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இரவு பர்வத வர்த்தினி அம்பாள், சாரதாம்பிகை அலங்காரத்தில் கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 7-வது நாளான இன்று இரவு கஜலட்சுமி அலங்காரத்திலும், 8-வது நாளான நாளை மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 9-வது நாளான 23-ந் தேதி சரஸ்வதி, துர்க்கை, லட்சுமி அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சியாக 24-ந் தேதி சாமி மற்றும் அம்பாள் கோவிலில் இருந்து எழுந்தருளி பத்திரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள மகர நோன்பு திடலுக்கு வந்த பின்னர் அங்கு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நவராத்திரி திருவிழா நடைபெறும் இந்த 9 நாட்கள் மட்டுமே அம்பாளின் தங்க ஸ்ரீ சக்கரம் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு அபிஷேகம், பூஜை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்