அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை

அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.

Update: 2022-09-18 18:45 GMT

நல்லம்பள்ளி:

அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.

தேய்பிறை அஷ்டமி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு 108 வகை நறுமண பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சாமிக்கு 1,008 ஆகம பூஜைகள், வேதபாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது.

பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன் ராஜ அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

சத்ரு சம்ஹார யாகம்

இதை தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. 108 கிலோ மிளகு, 1008 கிலோ மிளகாய் கொண்டு நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலபைரவர் கோவிலில் குவிந்தனர். வழக்கமாக கோவில் வளாகத்துக்குள்ளேயே பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வார்கள். நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையில் கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்