எதிரிகளிடம் இருந்து தப்பிக்க டி.ஜி.பி. அலுவலகத்தில் கத்தியுடன் தஞ்சமடைந்த ரவுடி - சென்னையில் பரபரப்பு
உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக வேறு வழியின்றி டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் ரவுடி அப்பு நுழைந்தார்.;
சென்னை,
சென்னை அடுத்த ஓட்டேரியை சேர்ந்த ரவுடி அப்பு என்பவர், கொலை வழக்கில் ஜாமீன் பெற்று அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து, தனது எதிரிகளிடம் இருந்து தப்பிக்க அப்பு தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், மயிலாப்பூர் பகுதியில் அப்பு அவரது எதிரிகளிடம் சிக்கிக் கொண்டார்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பி வந்த அப்பு, தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக வேறு வழியின்றி டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் நுழைந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தஞ்சம் புகுந்த அவர், தன்னிடம் இருந்த கத்தியையும் ஒப்படைத்தார். சரணடைந்த ரவுடி அப்புவை போலீசார் மெரீனா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், அப்புவை துரத்தி வந்த கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.