சென்னை பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அங்கீகாரம்

சென்னை பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்' தகுதியை ‘நாக்' கவுன்சில் வழங்கி இருப்பதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.;

Update:2023-08-22 19:55 IST

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்களுடைய கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்வதற்காக தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலிடம் (நாக்) தர மதிப்பீட்டை பெற வேண்டும். கற்பித்தல், ஆராய்ச்சி, சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு வசதி, சமூக பொறுப்பு உள்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இந்த மதிப்பீட்டை 'நாக்' கவுன்சில் வழங்கி வருகிறது. அதிகபட்சமாக ஒரு கல்வி நிறுவனத்துக்கு 'ஏ பிளஸ் பிளஸ்' அந்தஸ்து வரை வழங்கப்படும்.

இது அந்தந்த பல்கலைக்கழகம், கல்லூரியின் தரத்தை எளிதில் ஒப்பிடுவதற்கு வசதியாக இருக்கும். சென்னை பல்கலைக்கழகமும் 'நாக்' கவுன்சிலின் அங்கீகாரத்தை பெற விண்ணப்பித்து இருந்தது. அதன்படி, மத்திய-மாநில அரசுகளின் பேராசிரியர்கள் அடங்கிய 7 பேர் குழுவினர் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் சென்னை பல்கலைக்கழகத்தின் 5 வளாகங்களில் உள்ள அனைத்து துறைகள், மையங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றன.

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்துக்கு 'ஏ பிளஸ் பிளஸ்' தகுதியை 'நாக்' கவுன்சில் வழங்கி இருப்பதாக அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்