தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் தொடங்கியது- சங்கரய்யாவுக்கு இரங்கல் தீர்மானம்

முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

Update: 2023-11-18 04:36 GMT

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

குறிப்பாக பண மசோதா தவிர பல்வேறு மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. மாறாக, அவற்றை அரசிடமே அவர் திருப்பி அனுப்பி வைக்கிறார். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது. மனு மீது சமீபத்தில் நடந்த விசாரணையின்போது, கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து, வழக்கின் அடுத்த விசாரணையை 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. இந்த நிலையில், தமிழக அரசு ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றி

ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 சட்ட மசோதாக்களை அரசிடமே 2 நாட்களுக்கு முன்பு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க அரசு முடிவு செய்தது. அதற்காக சட்டசபையை உடனடியாக கூட்டுவதாக அறிவிக்கப்பட்டது. சட்டசபையின் சிறப்புக் கூட்டம் 18-ந் தேதி (இன்று) காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி இன்று சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூடியுள்ளது. முதலில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்