கல்லணை கிராமத்தில் மக்களைப் பாதிக்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக மூட வேண்டும் - சீமான்

மக்களின் அறப்போராட்டத்தை அரசு அடக்க முனைவது இந்த அரசு யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது என்று சீமான் கூறியுள்ளார்.;

Update:2025-12-05 13:58 IST

கோப்புப்படம் 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கல்லணை, அட்சங்குளம், டி.புதூர் மற்றும் நெடுங்குளம் பகுதிகளில் சட்டத்திற்குப்‌ புறம்பாக 300 அடிக்கும் மேல் ஆழமாகத் தோண்டப்பட்ட 15 கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக 3 கல்குவாரிகளை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். ஏற்கனவே உள்ள கல்குவாரிகளையே மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நெடுங்காலமாகப் போராடி வரும் நிலையில், அதனைச் சிறிதும் மதியாது புதிதாக 3 கல்குவாரிகளை அமைக்க திமுக அரசு அனுமதித்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

திருமங்கலம் பகுதியில் முறைகேடாக இயங்கும் கல்குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் முற்றாகக் குறைந்து 800 ஏக்கர் பாசன விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களது கிராம காவல் தெய்வமான மலை மேல் உள்ள ஐயனார் கோவில் அழியும் நிலையில் உள்ளதாகவும், குவாரி உரிமையாளர்கள் இந்தப் பகுதி விவசாய நிலங்களுக்கு வரும் தண்ணீரைத் திறக்க விடாமல் சதி செய்து வருவதாகவும் கல்லணை கிராமப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அனுமதியின்றி அதிகளவில் பள்ளம் தோண்டுவதோடு, வெடிகளை வைத்து தகர்த்துக் கற்களை வெட்டி எடுப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதோடு, குவாரி தூசிகளால் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களையும் அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து தொடர் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்தும், அதிகாரிகள் முதல் ஆட்சியாளர்கள் வரை பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, கல்குவாரி முதலாளிகளுக்கு ஆதரவாக மக்களின் அறப்போராட்டத்தை திமுக அரசு அடக்க முனைவது இந்த அரசு யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது.

இரு திராவிடக்கட்சிகளின் ஆட்சியிலும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களான மலைகள், ஆறுகள், ஏரிகள், காடுகள், விளைநிலங்கள் ஆகியவை தொடர்ந்து கொள்ளை போகக் கூடிய சூழல் உருவாக்கப்படுவதும் அதனை எதிர்த்துப் போராடுவதுமே தொடர்கதையாகி விட்டது. வளத்தைச் சுரண்டுவது எப்படி வளர்ச்சியாகும்? அதிலும் மனிதர்களால் உருவாக்கவே முடியாத இயற்கை அன்னையின் கொடைகளான மலைகள், ஆறுகள் போன்றவற்றை முற்றாக அழிக்கும் செயலில் ஈடுபடுவதும், ஈடுபடுவோரை அனுமதித்து அரசே வேடிக்கை பார்ப்பதென்பதும் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் பெருந்துரோகமாகும்.

திராவிடக் கட்சிகளின் 60 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் கல்குவாரிகளுக்காகவும், மலை மணலுக்காகவும், கிரானைட் உள்ளிட்ட கனிம வளத்திற்காகவும் ஏராளமான மலைகள் மற்றும் குன்றுகள் வெட்டி எடுக்கப்பட்டுவிட்டன. அறியாமையால் மக்கள் அதனைத் தடுத்து நிறுத்த தவறியதால் இன்றளவும் அதற்காக வருந்திக்கொண்டிருக்கின்றோம். ஆனால், நாம் தமிழர் கட்சி இந்த மண்ணில் வந்த பிறகு சுற்றுச்சூழல் குறித்து ஏற்படுத்திய தொடர் பரப்புரையின் விளைவாக விழிப்படைந்துள்ள மக்கள் தற்போது தாங்களே போராடத் தொடங்கியுள்ளனர். ஆனால், அதனையும் திமுக அரசு அதிகார கொடுங்கரம் கொண்டு அடக்கி ஒடுக்க முனைவது கொடுங்கோன்மையாகும்.

கடந்த காலங்களில் வெட்டப்பட்ட மலைகள், அழிக்கப்பட்ட ஆறுகள், காவு கொடுக்கப்பட்ட காடுகள், மூடப்பட்ட நீர்நிலைகள் ஆகியவற்றால் காலநிலை மாற்றம், புவி அதிக வெப்பமாதல் ஆகிய பாதிப்புகளை இன்று நாம் சந்தித்து வருகின்றோம். சாதி, மதத்தைக் காப்பாற்றுவதற்கும் அதற்காகப் போராடுவதற்கும் இங்கு பல கட்சிகள், இயக்கங்கள் உண்டு; ஆனால் இயற்கை அன்னையை, பூமித்தாயைக் காப்பாற்ற எவரும் முன்வருவதில்லை. அதற்காக எவரும் குரல் கொடுப்பதுமில்லை. இயற்கை வளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டு அடுத்த தலைமுறையின் நல்வாழ்விற்கு நாம் எதனை விட்டுச்செல்லப் போகிறோம்? என்ற கேள்விக்கு இங்கு எவரிடத்தில் பதில் இருக்கின்றது.

ஆகவே, மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து மதுரை மாவட்டம் கல்லணை கிராமத்தில் மக்களைப் பாதிக்கும் கல்குவாரிகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மூட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்