சேலம் சரகத்தில் சிறப்பு வாகன சோதனை: விதிமுறைகளை மீறி இயக்கிய 51 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

சேலம் சரகத்தில் அதிகாரிகள் நடத்திய சிறப்பு வாகன சோதனையில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 51 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.71 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.;

Update:2023-09-22 02:49 IST

சிறப்பு சோதனை

சேலம் சரகத்துக்குட்பட்ட சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பு வாகன சோதனை நடத்தினர்.

சேலம் சரகத்தில் மேட்டுப்பட்டி, கருப்பூர், தொப்பூர் ஆகிய சுங்கச்சாவடிகள் அருகிலும், புதிய பஸ் நிலையத்திலும் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை கடந்த 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது.

அபராதம்

அப்போது கண் கூசும் முகப்பு விளக்குகளை பயன்படுத்தியது, அவசர வழி கதவு செயல்படாதது, சாலைவரி செலுத்தாமல் இயக்கியது, முறையான ஆவணங்கள் இல்லாதது என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறி பல ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட 51 ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.71 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்