மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

Update: 2022-08-30 18:36 GMT

ஜெயங்கொண்டம்:

கைப்பந்து போட்டி

ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் மகிமைபுரம் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாளாளர் தினகரன், தலைமை ஆசிரியர்(பொறுப்பு) செழியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசி, போட்டிகளை தொடங்கி வைத்தனர். போட்டிகளுக்கு நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பட்டனர். இதில் மாணவர்கள் பிரிவில் 10 அணிகளும், மாணவிகள் பிரிவில் 4 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.

கபடி போட்டி

இதேபோல் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் 19, 17, 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டி ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியை தலைமை ஆசிரியர்(பொறுப்பு) இளங்கோவன் தொடங்கி வைத்தார். 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மீன்சுருட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், வானதிரையன்பட்டினம் பள்ளி இரண்டாம் இடமும், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கல்லாத்தூர் தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், மீன்சுருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மீன்சுருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், வடவீக்கம் ஆர்.சி. பாத்திமா பள்ளி இரண்டாம் இடமும் பிடித்தது.

மீன்சுருட்டி

மேலும் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான 19, 17, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவிற்கான கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில்குமார், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதலிடமும், மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உட்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கல்லாத்தூர், தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், வடவீக்கம் ஆர்.சி. பாத்திமா பள்ளி இரண்டாம் இடமும் பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்