எஸ்.எஸ்.எல்.சி. மறு தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்து ஆசிரியர்கள் கணக்கெடுப்பு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மறு தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்து ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்தினர்.

Update: 2022-06-09 16:17 GMT

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மறு தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்து ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்தினர்.

ஆசிரியர்கள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி வரை நடைபெற்றது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 5,846 பேர் எழுத விண்ணப்பித்தனர். இதையடுத்து தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு மறு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். சேத்துமடை அரசு பள்ளியில் 86 மாணர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தினர். இதில் 41 பேர் தேர்வு எழுத வரவில்லை. போதிய பஸ் வசதி, வாகன வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என்று பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

பள்ளிகளில் வகுப்புகள்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதாத மாணவ-மாணவிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில் 453 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுத வராத மாணவர்களின் வீடுகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் சென்று பெற்றோர், மாணவர்களிடம் மறு தேர்வு எழுத விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மீண்டும் மறுதேர்வு நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. இதுவரை 180 பேர் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மறு தேர்வு

சில மாணவர்கள் வெளியூருக்கு சென்று விட்டனர். அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தேர்வு எழுத வைக்கவும் முயற்சி நடந்து வருகிறது. சேத்துமடை அரசு பள்ளியில் 86 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் வனப்பகுதியில் இருந்து வரும் பழங்குடியின மாணவர்கள் 34 பேர் உள்பட 41 பேர் தேர்வு எழுதவில்லை.இதில் 6 பேர் மறு தேர்வுக்கு விருப்பம் தெரிவித்து தற்போது பள்ளிக்கு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்