புனித அந்தோணியார் ஆலய விழா: ராமேசுவரத்தில் இருந்து 70 படகுகளில் 2,193 பேர் கச்சத்தீவு சென்றனர்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்க ராமேசுவரத்தில் இருந்து 70 படகுகளில் 2,193 பேர் கச்சத்தீவு சென்றனர்.;

Update:2023-03-04 00:10 IST

ராமேசுவரம்,

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்திருக்கிறது.

ஆண்டுதோறும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்திலோ 2 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில், இலங்கையின் நெடுந்தீவு பங்குத்தந்தை வசந்தன், அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை ஏற்றினார்.

ஆலயத்தை சுற்றி 14 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி மற்றும் முதல் நாள் திருவிழா திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவில் நடக்கும் தேர் பவனிக்கான ஏற்பாடுகள் தொடங்கின.

2,193 பேர் பயணம்

விழாவின் 2-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருவிழா திருப்பலி பிரார்த்தனை நடைபெறுகிறது. காலை 9 மணி வரையிலும் இந்த பிரார்த்தனை நடக்கிறது. இதில் ராமேசுவரம் மற்றும் இலங்கையில் இருந்து சென்றிருந்த மக்கள் கலந்து கொள்கின்றனர்.

கச்சத்தீவில் நடைபெற்று வரும் அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க ராமேசுவரத்தில் இருந்து நேற்று 59 விசைப்படகுகள் மற்றும் 11 நாட்டுப்படகுகளில் 2,193 பேர் புறப்பட்டு சென்றனர். இவர்களில் பெண்கள் 362 பேர், குழந்தைகள் 65 பேர் ஆவர்.

முன்னதாக அனைவரும் துறைமுக பகுதியில் கடலோர போலீசார், கடலோர காவல் படை, சுங்கத்துறையினரின் முழுமையான சோதனைக்கு பின்னரே படகுகளில் ஏற அனுமதிக்கப்பட்டனர். படகு பயணத்தை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

பலத்த பாதுகாப்பு

கச்சத்தீவு விழாவை முன்னிட்டு ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 அதிநவீன கப்பல்கள், கடலோர காவல் படைக்கு சொந்தமான 5 கப்பல்கள் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதைத்தவிர கடலோர போலீசார், மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகுகளில் ரோந்து சென்று வருகின்றனர். ராமேசுவரம் துறைமுக கடற்கரை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்