ஆட்டோக்கள் மோதியதில் கல்லூரி மாணவி பலி

Update: 2023-01-25 16:51 GMT


திருப்பூரில் 2 ஆட்டோக்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார். ஆட்டோ டிரைவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). இவரது மனைவி சங்காயி (45). இவர்களுடைய மகள்கள் கோகிலா (21), ஜனனி (18).

2 ஆட்டோக்கள் மோதல்

முருகேசன் தனது குடும்பத்துடன் திருப்பூர் சிறுபூலுவப்பட்டி ரங்கநாதபுரத்தில் குடியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஜனனி திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன் தினம் இரவு தனது சொந்த ஊருக்கு முருகேசன் தனது மனைவி, மகள்களுடன் புறப்பட்டார். புஷ்பா சந்திப்பு செல்வதற்காக காலேஜ் ரோட்டில் ஆட்டோவை வாடகைக்கு பேசி ஏறினார்கள். இரவு 9.30 மணி அளவில் ஆட்டோ, ஹவுசிங் யூனிட் பகுதி அருகே சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு ஆட்டோ நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கல்லூரி மாணவி பலி

இந்த விபத்தில் ஆட்டோவுக்குள் இருந்த ஜனனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. முருகேசன், சங்காயி, கோகிலா ஆகியோரும் காயமடைந்தனர். மேலும் ஆட்டோ டிரைவரான குணசேகர் (43) என்பவரும் காயமடைந்தார். எதிரே வந்த மற்றொரு ஆட்டோ டிரைவரான பூத்தார் தியேட்டர் பகுதியை சேர்ந்த சின்னத்துரையும் (35) காயமடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜனனி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். முதல்கட்ட விசாரணையில் ஆட்டோ டிரைவர் சின்னத்துரை குடிபோதையில் வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆட்டோக்கள் மோதியதில் கல்லூரி மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்