நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி

ஊத்துக்குளி அருகே நண்பர்களுடன் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.

Update: 2023-04-15 15:07 GMT

ஊத்துக்குளி அருகே நண்பர்களுடன் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவர்கள்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் இனியவன் (வயது 12). அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் சந்துரு (12). இவன் பொன்னாபுரம் நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் இருவரும் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து வீட்டின் அருகில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்க சென்றனர்.

நீரில் மூழ்கி பலி

அங்கு 5 பேரும் ஒன்றாக சேர்ந்து நொய்யல் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இனியவன் மற்றும் சந்துரு ஆகியோர் நீரில் மூழ்கினர். இதைப் பார்த்து மற்ற 3 பேரும் அலறினர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் 2 மாணவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் இனியவன், சந்துரு உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோகத்தை ஏற்படுத்தியது

சிறுவர்களின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது.

இந்த சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ''இது போன்ற விபரீத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க விடுமுறை நாட்களில் பெற்றோர் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். நீர்நிலைகளுக்கு தனியாக செல்ல அனுமதிக்கக் கூடாது" என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்