கல்பாக்கம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி

கல்பாக்கம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் பரிதாபமாக இறந்தார். வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-17 08:25 GMT

சாவு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் நகரியத்தில் அமைந்துள்ள அணுசக்தி மத்திய பள்ளியில் அணுவாற்றல் குடியிருப்பை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சர்வன் (வயது 9). 4-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக அணுவாற்றல் சாலையை கடந்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். கல்பாக்கம் நகரியம் காமாட்சியம்மன் கோவில் அருகே தமிழ்நாடு அரசு பஸ் ஒன்று செங்கல்பட்டில் இருந்து கல்பாக்கம் பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற சர்வன் மீது அரசு பஸ் மோதியது. இதில் பஸ் சக்கரம் மாணவர் சர்வனின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் மாணவர் சர்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மறியல்

இந்த விபத்து சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று அரசு பஸ்சை சிறைபிடித்தனர். அங்கு அடிக்கடி விபத்துகள் நடப்பதால் வேகத்தடை அமைக்க கோரி சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி சாமிநாதன் தலைமையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்மோனி மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்களிடம் பள்ளி சாலை சந்திப்பு என்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் கல்பாக்கம் அணுவாற்றல் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை எனவும், இனி இது போல் விபத்து சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். உடனடியாக சம்பந்தப்பட்ட அணுவாற்றல் துறை அதிகாரிகளிடம் பேசி இங்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மாணவரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்