குன்றத்தூர் அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெருக்கடியால் மாணவர்கள் அவதி

குன்றத்தூர் அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெருக்கடியால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

Update: 2023-08-18 08:07 GMT

குன்றத்தூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி நடத்தப்பட்டு வரும் நிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தினமும் அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். இந்த பகுதியிலேயே நகராட்சி அலுவலகம் உள்ளது. தினமும் காலையில் கட்டிட வேலைக்கு செல்லும் பெண்களும், ஆண்களும் இந்த சாலையின் இரு பகுதியிலும் ஆக்கிரமித்து நிற்கின்றனர்.

அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் இந்த சாலையின் ஓரம் நிறுத்தி வைத்து இருப்பதால் தினந்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அது மட்டுமின்றி காலை, மாலை இருவேளைகளிலும் பள்ளி மாணவர்களை பெற்றோர் அழைத்து சென்று பள்ளியில் விடுவதற்குள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சென்று வருகின்றனர். அது மட்டுமின்றி தற்போது இந்த பள்ளி வளாகத்திலேயே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதால் இடம் நெருக்கடி ஏற்பட்டு ஒரு வழியில் மட்டுமே மாணவர்கள் செல்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு இடையூறு இல்லாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்