செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-02-11 16:44 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மேலக் கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பல்கலைக்கழகத்தில் உள்ள இறகுப்பந்து, கைப்பந்து, மேஜைப்பந்து, உள்விளையாட்டு பயிற்சி கூடங்கள், உயிர் எந்திரவியல் ஆய்வகம், சிந்தடிக் ஓடுதளம், தடகளம், கால்பந்து, ஆக்கி மைதானங்கள், யோகா மையம், நூலகம், வகுப்பறை, ஆராய்ச்சிக்கூடம், கருத்தரங்கக் கூடம், தியான மண்டபம் மற்றும் மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிகள் ஆகியவற்றையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, குறிப்பாக விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாணவ-மாணவிகளிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு எந்தவித குறையுமின்றி அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும், விளையாட்டு மைதானங்கள், உள்விளையாட்டு பயிற்சிக் கூடங்களை நல்ல முறையில் பராமரித்திட வேண்டும், பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் ஒவ்வொரு மாணவர்களையும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குகின்ற வகையில் முறையான பயிற்சி அளித்திட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அங்கிருந்த மாணவ-மாணவிகளிடம் விளையாட்டு பயிற்சியுடன் கல்வியிலும் முழுக்கவனம் செலுத்தி சிறந்து விளங்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர், பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்