காவனூரில் உயர்மட்ட பாலம் அமைக்க மண் ஆய்வு பணி

ராமநாதபுரம் அருகே காவனூர் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கபட உள்ளதால் அதற்கான மண் ஆய்வு பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-06-01 18:45 GMT

ராமநாதபுரம் அருகே காவனூர் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கபட உள்ளதால் அதற்கான மண் ஆய்வு பணியில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

வைகை தண்ணீர்

ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரே நீர் ஆதாரம் வைகை தண்ணீரும், வடகிழக்கு பருவமழையும்தான். இவை இரண்டும் வருடந்தோறும் இந்த மாவட்டத்திற்கு வருவதில்லை. வைகை தண்ணீர் வந்தால் பருவமழை பெய்வதில்லை. இவ்வாறு கடந்த பல ஆண்டுகளாக அவல நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்த போதிலும் வைகை தண்ணீர் அதிகளவில் வந்ததால் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்பட்டுள்ளதோடு வைகை தண்ணீர் பாயும் பகுதிகளில் மட்டும் விவசாயம் நன்றாக விளைந்து கைகொடுத்தது.

வைகை தண்ணீரும் அதிகளவில் வரும் சமயங்களில் அதனை தேக்கி வைக்க முடியாமல் காவனூர் பாலம் வழியாக சென்று புல்லங்குடி பகுதியில் கடலில் கலந்து வீணாகி வருகிறது. மற்றொரு வழியில் பெரிய கண்மாய் சக்கரக்கோட்டை கண்மாய் வழியாக கடலில் கலந்து வீணாகி வருகிறது. இவ்வாறு வைகை அணையில் இருந்து தண்ணீர் பெருமளவில் திறந்துவிடப்படும் சமயங்களில் கால்வாய்களில் கரைகளை உடைத்து கொண்டு காவனூர் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து கிராமங்களை சூழ்ந்துவிடுவது வழக்கம்.

பொதுமக்கள் கோரிக்கை

கடந்த 2 ஆண்டுகளாக வெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது காவனூர் வழியாக தண்ணீர் தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்றது. இதனால் பாதுகாப்பு கருதி காவனூர் பாலத்தில் இருபுறமும் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டு யாரும் பாலத்தை கடந்து செல்லாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டது. சாலை துண்டிக்கப்பட்டதால் இருபுறமும் செல்ல வேண்டிய கிராம மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்தநிலை அடிக்கடி ஏற்படுவதை தொடர்ந்து காவனூர் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாம் இதற்கான அரசின் அனுமதியை பெற்றுள்ளது. அதன்படி காவனூர் தரைப்பாலத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆய்வு

இதனை தொடர்ந்து காவனூர் பகுதியில் தரைப்பாலத்தின் இருபுறமும் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் மண்ணின் தரம், உயர்மட்ட பாலம் அமைய உள்ள பரப்பளவு உள்ளிட்டவைகளை குழுவினர் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வின் முடிவில் விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்