திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் நகை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் நகை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2023-06-02 20:07 GMT

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியைச் சேர்ந்த தங்கப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருவட்டார் ஆதிகேசவர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கக் கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் கோவிலின் கலசத்தை பாதுகாக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கோவில் கும்பாபிஷேகத்தின் போது பழைய கலசமும், தங்க ஆபரணங்களும் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை. கோவிலில் தங்க ஆபரணங்கள், பழைய கலசம், குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தேன். உரிய பதில் இல்லை. 1992-ம் ஆண்டு இந்த கோவிலில் திருட்டு சம்பவம் நடைபெற்று கோவிலுக்கு சொந்தமான தங்க அங்கி உள்ளிட்ட சில பொருட்கள் காணாமல் போயின. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான பல தங்க ஆபரணங்கள், சிலைகள் எங்கே உள்ளன என தெரியவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போதும் முறையாக பதில் அளிக்கப்படவில்லை. ஆகவே திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் தங்க சிவலிங்கம், பஞ்சலோக சிலைகள், பழைய கலசம் மற்றும் தங்க நகைகளை அவற்றின் பழைய இடத்தில் மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இதை வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 1992-ம் ஆண்டுக்கு முன்பு எவ்வளவு நகைகள் மற்றும் சொத்துகள் இருந்தன? திருட்டு சம்பவம் நடந்த பின், எவ்வளவு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன?

தற்போது உள்ள நகைகள் மற்றும் சொத்து குறித்த விவரங்கள் குறித்து இணை கமிஷனர் நேரில் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்