சோலையாறு அணையில் இருந்து 4-வது நாளாக உபரிநீர் வெளியேற்றம்

வால்பாறையில் தொடர் கனமழை பெய்து வருவதால், சோலையாறு அணையில் இருந்து 4-வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.;

Update:2022-07-16 20:33 IST

வால்பாறை, 

வால்பாறையில் தொடர் கனமழை பெய்து வருவதால், சோலையாறு அணையில் இருந்து 4-வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

உபரிநீர் வெளியேற்றம்

வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. தொடர்ந்து கடந்த 11-ந் தேதி அணை திறக்கப்பட்டு, மதகுகள் வழியாக உபரிநீர் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டு பின்னர் அடைக்கப்பட்டது.

தொடர்ந்து கனமழை பெய்ததால், 12-ந் தேதி இரவு சோலையாறு அணையில் இருந்து வினாடிக்கு 2,547 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் விட்டு, விட்டு கனமழை பெய்து வருவதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை விட, அணைக்கு வரும் தண்ணீர் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று 4-வது நாளாக சோலையாறு அணை திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

கடந்த ஆண்டை விட மின் உற்பத்திக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சோலையாறு மின்நிலையம்-1 இயக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பின் 790 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்படுகிறது. மின்நிலையம்-2 இயக்கப்பட்டு மின் உற்பத்திக்க பின்னர் 620 கனஅடி தண்ணீர் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. சேடல்பாதை வழியாக 2,700 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது.

மேலும் அணை நிலவரத்தை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கருமலை, நடுமலை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வருகிற நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடரும் என்பதால், வால்பாறையில் மழை பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். ஆறுகளில் தண்ணீரை செல்வதை பார்வையிடவோ அல்லது இறங்கி குளிக்கவோ வேண்டாம் என்று ஆற்றோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்