பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதிகளில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு- அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதிகளில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update:2022-07-20 20:43 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதிகளில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் ஆய்வு

பொள்ளாச்சி பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பழுதடைந்த கட்டிடங்கள் விழுந்து விபத்து ஏற்படுதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 26 கிராம ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி குறித்து அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பள்ளி வளாகத்தில் பயன்படுத்தாமல் உள்ள கட்டிடங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு, அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் எந்தெந்த பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வது, வர்ணம் பூசுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-

பழுதடைந்த கட்டிடங்கள் அகற்றம்

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதிகளில் 26 கிராம ஊராட்சிகள் மற்றும் சமத்தூர், ஜமீன்ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி 48 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும், 12 நடுநிலைப்பள்ளிகளும் சேர்த்து மொத்தம் 60 பள்ளிகள் உள்ளன. மழைக்காலத்தையொட்டி பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மிகவும் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் பயன்பாட்டில் இருந்த பழுதடைந்த கட்டிடங்கள் மொத்தம் 24 கட்டிடங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

இதில் சோலபாளையம், சீலக்காம்பட்டி, கே.நாகூர், சூளேஸ்வரன்பட்டி செம்பாகவுண்டர் காலனி, கெட்டிமல்லன்புதூர், நாட்டுக்கல்பாளையம், நல்லாம்பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கும், கரட்டுபாளையம், சூளேஸ்வரன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கும் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. பழுதடைந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு விட்டு புதிதாக கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்படும். இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் மூலம் கோவை மாவட்ட கலெக்டருக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். இதை தவிர 15 கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் ஒன்றிய பொது நிதி அல்லது ஊராட்சி நிதி மூலம் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்