ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில்இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

Update: 2023-07-13 19:00 GMT

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் வண்டிப்பேட்டையில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவ, மாணவிகளுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சுகாதாரத்துறை சார்பில் பிள்ளாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி நேற்றும் வழக்கம்போல் மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இதனை சில மாணவ, மாணவிகள் காலையில் சாப்பிடாமலும், சிலர் மதிய உணவுக்கு முன்னதாகவும் மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாலை 3 மணிக்கு மேல் சில மாணவ, மாணவிகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பிள்ளாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பள்ளியில் இருந்த சில மாணவர்களையும் டாக்டர்கள் பரிசோதித்தனர். 48-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் மதன் (வயது 12), பிரனவிகா (13), தர்சினி (15) உள்பட 9 மாணவ மாணவிகள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடு திரும்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, நாமக்கல் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி, ராசிபுரம் தாசில்தார் சுரேஷ் மற்றும் அரசியல் கட்சியினர் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு கலெக்டர் உமா மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு வழங்கப்பட்ட மாத்திரைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டரிடம் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்