தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - வைரமுத்து கண்டனம்

கர்நாடக மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்ததற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-28 03:19 GMT

சென்னை,

கர்நாடகத்தில் உள்ள சிவமோகா நகரில் பா.ஜ.க. சார்பில் நேற்றி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிவமோகா நகரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்ட நிகழ்ச்சி என்பதால், இந்நிகழ்வின் போது தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்ற நிலையில், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், அவரின் வற்புறுத்தலின் பேரில் கன்னடதாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்ததற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறும்போது;

"கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது.

ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம்.

கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது; திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது மறக்க வேண்டாம்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்