ஆபத்தை உணராமல் குளியல் போடும் வாலிபர்கள்

பழனி வரதமாநதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆபத்தை உணராமல் வாலிபர்கள் குளியல் போடுகின்றனர். இதை தடுக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-04-16 19:00 GMT

வரதமாநதி அணை

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலை பகுதியில் வரதமாநதி அணை உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணை பகுதியை பார்வையிட்டு செல்ல சுற்றுப்புற பகுதி மக்கள் ஏராளமானோர் வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் பழனிக்கு வரும் பக்தர்கள், கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் என பலர் வருகை தருகின்றனர். அப்போது அணை பகுதியை பார்வையிட்டு பின் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இந்த அணைக்கு போதிய நீர் வரத்து இல்லாததால் மொத்த உயரமான 66.47 அடியில் தற்போது 36 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் பழனி பகுதியில் கடும் வெயில் நிலவுகிறது. எனவே மக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்தவகையில் பழனி பகுதி மக்கள், வெளியூர் பக்தர்கள் வெயிலில் இருந்து தப்பிக்க கொடைக்கானல் சாலை, வரதமாநதி அணைக்கு வருகின்றனர்.

கண்காணிப்பு தேவை

இதில் சிலர் ஆபத்தை உணராமல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் குளியல் போடுகின்றனர். குறிப்பாக வாலிபர்கள் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு சென்று நீரில் இறங்கி குளிக்கின்றனர். இதுகுறித்து அங்குள்ளவர்கள் கூறினாலும் அதை அவர்கள் பொருட்டாக எடுத்து கொள்வதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரதமாநதி அணை பகுதியில் குளித்தபோது சென்னை வாலிபர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நடந்தது. அதையடுத்து அங்கு போதிய பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி மக்கள் பார்வையிட செல்லலாம். ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது வரதமாநதி அணையின் நீர்ப்பிடிப்புக்கு பலர் சென்று குளிக்கின்றனர். எனவே மீண்டும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க அங்கு போதிய பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்