பயறு வகை விதைகளுக்கு பரிசோதனை அவசியம்-வேளாண்மை அலுவலர்கள் தகவல்

Update:2023-04-25 00:15 IST

நாமக்கல்:

பயறு வகை விதைகளை விதைப்பதற்கு முன்பு விதை பரிசோதனை அவசியம் என்று வேளாண்மை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் சரஸ்வதி, சரண்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விதை பரிசோதனை

சித்திரை பட்டத்தில் பயறு வகைகளை சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த செலவில், குறுகிய காலத்தில் அறுவடை செய்து அதிக லாபம் பெற முடியும். மேலும் காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து மண்ணில் நிலைநிறுத்தப்படுவதால் மண்வளம் மேம்படுத்தப்படும்.

எனவே விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள பயறு விதைகளான உளுந்து, தட்டைப்பயறு மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை விதை பரிசோதனை செய்து நல்ல முளைப்புத்திறன் கொண்ட நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதமுடைய மற்றும் பூச்சி நோய் தாக்குதல் இல்லாத விதைகளை விதைப்பதால் வயலில் பயிர் எண்ணிக்கை பராமரிப்பதுடன் அதிக மகசூல் பெறலாம்.

தரத்தினை அறிந்து கொள்ளலாம்

விதை தரத்தினை பொறுத்தவரை உளுந்து, தட்டைப்பயறு மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றின் விதை முளைப்புத்திறன் 75 சதவீதம், புறத்தூய்மை 98 சதவீதம் மற்றும் ஈரப்பதம் 9 சதவீதம் ஆக இருக்க வேண்டும்.

எனவே நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட வளாகத்தில் இயங்கி வரும் விதைப் பரிசோதனை நிலையத்தில் 100 கிராம் விதையுடன், ஒரு மாதிரிக்கான விதை பரிசோதனை கட்டணமாக ரூ.80 செலுத்தி தரத்தினை அறிந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்