சரக்கு வேன் தீப்பற்றி எரிந்தது

சரக்கு வேன் தீப்பற்றி எரிந்தது.

Update: 2023-01-21 18:58 GMT

பாடாலூர்:

சரக்கு வேன்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் சன்னகேசவன்(வயது 45). இவருக்கு சொந்தமான சரக்கு வேனில் இதே பகுதியை சேர்ந்த டிரைவர்களான செல்வகுமார்(46), விக்னேஷ்குமார்(31) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கடலூரில் இருந்து 4 டன் மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தனர். சரக்கு வேனை செல்வகுமார் ஓட்டினார்.

ெபரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென சரக்கு வேன் என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதையறிந்த செல்வகுமார் சரக்கு வேனை நிறுத்தினார். இதையடுத்து செல்வகுமாரும், விக்னேஷ்குமாரும் சரக்கு வேனில் இருந்து இறங்கி வந்து பார்த்தனர்.

தீப்பற்றி எரிந்தது

அப்போது சரக்கு வேனின் முன்புறம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இது பற்றி செல்வகுமார் பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

மேலும் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து சரக்கு வேனில் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் வேனின் முன்பகுதி எரிந்து நாசமானது.

மீன்கள் தப்பின

ஆனால் வேனின் பின்பகுதிக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதால், வேனில் இருந்த மீன்கள், தீக்கிரையாகாமல் தப்பின. இதையடுத்து அந்த மீன்கள் மாற்று வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டன. இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சரக்கு வேன் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்