கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை கலெக்டர் வீடு, வீடாக வழங்கினார்

ராமநாதபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன்களை வீடு, வீடாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.;

Update:2023-07-21 00:15 IST

ராமநாதபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன்களை வீடு, வீடாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

விண்ணப்ப படிவம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட வழங்கல்துறை சார்பில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பபடிவம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் நகரில் உள்ள ராம்கோ கடை எண் 10-ல் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விண்ணப்பபடிவம் மற்றும் டோக்கன் வழங்கினார்.

தொடர்ந்து ராமநாதபுரம் அருகே பாப்பாகுடி கிராமத்திலும் விண்ணப்பபடிவம் மற்றும் டோக்கன்களை வீடு வீடாக வழங்கினார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

2 கட்டமாக முகாம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான விண்ணப்ப படிவங்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 263 ரேஷன் கார்டுகள் உள்ளன. விண்ணப்பங்கள் பெறுவதற்கு 2 கட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

முதல் கட்டமாக 24.7.23 முதல் 4.8.23 வரை முகாம் நடைபெறுகிறது. இதில் 326 ரேஷன் கடைகள் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரம் விண்ணப்பங்கள் ரேஷன் அட்டைதாரர்களிடம் இருந்து பெறப்படுகின்றன. இந்த முகாமில் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த தேதி மற்றும் எந்த நேரத்தில் வர வேண்டுமென டோக்கனில் பதிவு செய்து விண்ணப்பத்துடன் வழங்கப்படுகிறது.

அதேபோல் 5.8.23 முதல் 16.8.23 வரை 2-ம் கட்ட முகாம் நடைபெறுகிறது. இதில் 439 ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 263 ரேஷன் அட்டைதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் மற்றும் உரிய ஆவணங்கள் பெறப்படுகிறது. முகாம் நடைபெறும் நாட்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்படும்.

கண்காணிப்பு

ஒவ்வொரு ரேஷன்கடையிலும் பணியாளர்களுடன் மகளிர் குழு உறுப்பினர் ஒருங்கிணைந்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பபடிவம் மற்றும் டோக்கன்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. இப்பணி நடைபெறும் பொழுது கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கண்காணித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் முகாமில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டுறவுத்துறை இணை இயக்குனர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மனோகரன், கூட்டுறவுத்துறை இணைபதிவாளர் மீனாட்சி சுந்தரம், வட்ட வழங்கல் தாசில்தார் தமீம்ராஜா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

=====

Tags:    

மேலும் செய்திகள்