அரசு டவுன் பஸ்சை நடுரோட்டில் நிறுத்திய டிரைவர்

விழுப்புரம் அருகே பரபரப்பு அரசு டவுன் பஸ்சை நடுரோட்டில் நிறுத்திய டிரைவர் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை எச்சரித்தும் கேட்காததால் ஆத்திரம்

Update: 2022-11-08 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே தளவானூர் கிராமத்தில் இருந்து நேற்று காலை விழுப்புரத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்சிற்குள் நிற்பதற்கு போதிய இடவசதி இருந்தும் சில பள்ளி மாணவர்கள், பஸ்சிற்குள் நிற்காமல் முன்புற மற்றும் பின்புற படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். அவர்களை பஸ் டிரைவரும், கண்டக்டரும் உள்ளே வந்து பயணிக்குமாறு அறிவுறுத்தினர். பலமுறை எச்சரிக்கை செய்தும் அதை அந்த மாணவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து, பஸ்சின் படிக்கட்டுகளிலேயே தொங்கியபடி பயணம் செய்தனர். அதோடு பஸ் டிரைவரையும், கண்டக்டரையும் மாணவர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்து ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர், சாலாமேடு கிராமத்தில் வந்தபோது திடீரென பஸ்சை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி அங்குள்ள ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தார். மாணவர்கள் பஸ் படிக்கட்டில் நிற்காமல் உள்ளே சென்றால்தான் பஸ்சை இயக்குவேன் என்று டிரைவர் கூறினார். அதன் பிறகு பஸ்சில் இருந்த சக பயணிகள், அந்த டிரைவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு பள்ளி மாணவர்களுக்கும் உரிய அறிவுரை கூறி பஸ்சிற்குள் செல்லுமாறு கூறினர். இதைத் தொடர்ந்து அந்த பஸ் அங்கிருந்து விழுப்புரம் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் சாலாமேடு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்