சரவணம்பட்டி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முத்துகுமார் (31). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யா (29) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் கோவை சரவணம்பட்டி அம்மன் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
முத்துக்குமார் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விளையாட சென்றபோது திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அவருக்கு அல்சர் இருப்பது தெரியவந்தது.
இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக கிரிக்கெட் விளையாட செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் மருந்து சாப்பிட்டு அல்சர் குணம் அடைந்ததால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சுகன்யா முத்துக்குமாரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். திருமணமாகி 5 மாதத்தில் கணவர் இறந்து விட்டதை பார்த்து சுகன்யா கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.