ஆவின் பால் விஷயத்தில் தனியாருக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது

ஆவின் பால் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி தனியாருக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டினார்.

Update: 2023-03-17 21:28 GMT

மதுரை, 

ஆவின் பால் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி தனியாருக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டினார்.

உறுப்பினர் அட்டை

மதுரை அ.தி.மு.க. புறநகர் மேற்கு மாவட்டம் சார்பாக திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அதில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், ராமசாமி, மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் திருப்பதி, வக்கீல் தமிழ்ச்செல்வன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், கள்ளிக்குடி சேர்மன் மீனாட்சி மகாலிங்கம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆர்யா, ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், காசிமாயன், சரவணபாண்டி, சிங்கராஜபாண்டியன், சேர்மன் லதா ஜெகன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

கடந்த நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தந்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், தன்னை நிலை நிறுத்தி கொள்ள தேவையற்ற போராட்டங்களை எல்லாம் நடத்தினார். அதனையெல்லாம் எடப்பாடி பழனிசாமி முறியடித்து சிறப்பான நிர்வாகத்தை தந்தார். தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்த கோரி, ஆவினுக்கு பால் நிறுத்த போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. பராமரிப்பு செலவு அதிகரித்தது மூலம், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதால், ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42-ம், எருமைப்பாலுக்கு ரூ.51-ம் உயர்த்தி வழங்க வேண்டும், கறவை மாடுகளுக்கு ஆவின்நிறுவனம் சார்பில் இலவச காப்பீடு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.

தனியார் சாதகம்

கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பால் தட்டுப்பாடு இல்லை. தற்போது ஆவின் பால் இல்லாத ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகளில் ஒரு நாளைக்கு தேவையான அளவு பால் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் தனியார் பால் நிறுவனங்கள், ஆவின் நிறுவனத்துடன் போட்டி போட்டு கொண்டு, குறைந்த விலைக்கு தரமான பாலை விற்பனை செய்தனர்.

இருப்பினும் அவர்களால் ஆவின் நிறுவனத்துடன் போட்டி போட முடியவில்லை. ஆனால் இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் பால் விற்பனையை கூட சரியாக செய்ய முடியவில்லை. ஏற்கனவே ஆவின் பால் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் தற்போது பாலுக்கு தட்டுப்பாடு என்ற நிலையால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆவின் பால் தட்டுப்பாட்டை உருவாக்கி, தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அரசு செயல்படுகிறது என்ற பேச்சு மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

இந்த 22 மாத கால தி.மு.க. ஆட்சியில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தின் கடன் சுமை மட்டும் அதிகரித்து உள்ளன. இந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு புதிய கடன்களை தமிழக அரசு வாங்கி உள்ளது. திருச்சியில் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தி.மு.க.வினர் சண்டை போடுகின்றனர். அதில் பெண் போலீஸ் ஒருவர் காயம் அடைந்து இருக்கிறார்.அ.தி.மு.க. ஆட்சியில் போலீசை கண்டு ரவுடிகள் பயந்து நடுங்கினர். ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் ரவுடிகளை கண்டு போலீசார் பயந்து நடுங்குகின்றனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டு போய் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்