அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் நர்சுகள் கைதை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-10-11 02:00 IST

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கொரோனா கால நர்சுகளை போலீசார் அத்துமீறி கைது செய்ததை கண்டித்தும், அந்த நர்சுகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதி எண் - 356-ஐ போல் நிறைவேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை கைது செய்த காவல்துறையினரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து நிருபர்களிடம் .செல்வம் கூறியதாவது:-

கொரோனா காலகட்டத்தில் மக்களின் உயிர்காக்க பணியில் ஈடுபட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்.ஆர்.பி. நர்சுகள் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது உரிமைக்காக போராடிய நர்சுகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். அதே போன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அரசு ஊழியர் சங்க உசிலம்பட்டி வட்டக்கிளை தலைவர் அய்யங்காளை தலைமையில் எம்.ஆர்.பி. செவிலியர்கள் இணைந்து சென்னையில் நர்சுகளை கைது செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்