கொங்கர்பாளையம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் அலுவலர்கள்- பொதுமக்கள் இடையே கடும் விவாதத்தால் பரபரப்பு
கொங்கர்பாளையம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் அலுவலர்கள்- பொதுமக்கள் இடையே கடும் விவாதத்தால் பரபரப்பு;
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட்சியில் கொன்னக் கொடிகால் ரேஷன் கடை வளாகத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கொங்கர்பாளையம் ஊராட்சி தலைவர் ஜானகி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், மின் மோட்டார் பராமரிப்பு, குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல் மற்றும் தண்ணீர் எடுத்து விடுதல் உள்ளிட்ட பணிகளுக்கான செலவு கணக்குகளில் குளறுபடி நடந்து உள்ளதாக முறையிட்டனர்.
இதனால் கிராம சபை கூட்டத்துக்கு வந்திருந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிலருக்கும் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பங்களாப்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் 7-வது வார்டு உறுப்பினர் இ்ளங்கோவன் பொதுமக்கள் சார்பில், மக்களின் முறையான கேள்விகளுக்கு பதில் இல்லை, சரியான பதிவேடுகள் ஏதும் கொண்டு வரவில்லை, மறு தேதி குறிப்பிட்டு மாவட்ட கலெக்டர் முன்னிலையில் கொங்கர்பாளையம் ஊராட்சி கிராமசபை கூட்டம் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்.