ஆக்கிரமிக்கப்பட்ட கல் மண்டபத்தை மீட்க வேண்டும்; இந்து முன்னணியினர் கலெக்டரிடம் மனு

பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கல் மண்டபத்தை மீட்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.;

Update:2023-05-31 00:13 IST

பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கல் மண்டபத்தை மீட்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ஆக்கிரமிப்பு

இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் தலைமையில் மாநில செயலாளர் குற்றாலநாதன், வக்கீல் பாலாஜி கிருஷ்ணசுவாமி, மாவட்ட தலைவர் சிவா மற்றும் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பாளையங்கோட்டை தாலுகா நொச்சிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு 800 வருடங்களுக்கு முன்னர் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பெருமாள் கோவில், சிவன் கோவில் மற்றும் திருச்செந்தூர் செல்லும் பாத யாத்திரை பக்தர்கள் தங்கி செல்வதற்கு கல் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் யாரால் அமைக்கப்பட்டது என்ற பெயருடன் கூடிய பதிக்கப்பட்ட கல்வெட்டுகள் சுவர்களில் இருந்து வருகிறது.

இந்த சத்திரம் மற்றும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடங்களை கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த இடத்திற்கு போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடியாக சிலர் பட்டா பெற்றுள்ளனர். இதனை மீட்க போராடிய நபர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த இடம் தொடர்பாக உதவி கலெக்டர் அலுவலகத்தில் வழக்கு போடப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. அந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

மீட்க வேண்டும்

எனவே மாவட்ட கலெக்டர், இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்ய முயலும் தனி நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தையும் மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்