போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட மூதாட்டி பிணம்

தேனியில் தகனம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் மூதாட்டி பிணத்தை உறவினர்கள் தேனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-07 19:00 GMT

மூதாட்டி சாவு

நாகப்பட்டினத்தை சேர்ந்த கருப்பையா மனைவி அன்னத்தாய் (வயது 80).இவர் நாகப்பட்டினத்தில் தனது 2-வது மகள் லட்சுமியுடன் வசித்து வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள மூத்த மகள் ராமுத்தாய் (48) வீட்டுக்கு வந்தார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவருடைய இறப்பில் லட்சுமிக்கு சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. அவர் தனது தாயாரின் பிணத்தை நாகப்பட்டினத்துக்கு கொண்டு வருமாறு கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், பிணத்தை தகனம் செய்வதற்காக அமரர் ஊர்தியில் ஏற்றி தேனி நகராட்சி எரிவாயு தகனமேடைக்கு உறவினர்கள் கொண்டு வந்தனர்.

போலீஸ் நிலையம் வந்தனர்

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் வந்ததால், பிணத்தை தகனம் செய்ய முடியாது என்றும், மறுநாள் கொண்டு வருமாறும் தகன மேடையில் பணியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் பிணத்தை உறவினர்கள் தேனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். போலீஸ் நிலையம் அருகில் அமரர் ஊர்தியை நிறுத்தி வைத்துவிட்டு, பிணத்தை அடக்கம் செய்வதில் உள்ள பிரச்சினை குறித்து போலீசாரிடம் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து மூத்த மகள் ராமுத்தாய் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் இரு மகள்களிடமும் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மீண்டும் தேனி எரிவாயு தகன மேடைக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்