அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வில் ஏராளமானோர் இணைகிறார்களா? விஜய் பேச்சுக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்
.கரூர் சம்பவத்துக்கு முன் விஜய் பேச்சுக்கும், கரூர் சம்பவத்துக்கு பின்பு அவரது பேச்சுக்கும் நிறைய மாறுபாடு ஏற்பட்டுள்ளது என்று உதயகுமார் கூறினார்.;
மதுரை,
த.வெ.க. தலைவர் விஜய் ஆரம்பத்தில் தி.மு.க.வை மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய்து வந்தநிலையில் சமீபகாலமாக அ.தி.மு.க.வையும் மறைமுகமாக சீண்டி வருகிறார். ஈரோட்டில் நேற்று பேசிய விஜய், ‘‘அண்ணா, எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்த கூடாது என்று யாரும் சொல்வதற்கு உரிமை இல்லை.
அவர்கள் தமிழகத்தின் சொத்து. செங்கோட்டையன் (அ.தி.மு.க.வில் இருந்து) த.வெ.க.வில் வந்து சேர்ந்தது நமக்கு பெரிய பலம். அவரைப்போல் இன்னும் நிறைய பேர் சேர இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுப்போம்” என்றார். விஜயின் இந்த பேச்சு, அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பெருமைப்படுத்துவதற்காகவும், தனது கட்சி தொண்டர் களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவும் சில கருத்துகளை செல்வார்கள். அதை பெரிதுபடுத்த வேண்டாம். இந்த கருத்தை செங்கோட்டையனும் சொல்லி கொண்டு இருக்கிறார். ஆனால், இதுவரை யாராவது த.வெ.க.வில் சேர்ந்தார்களா? அவரை நம்பி யாரும் செல்லவில்லை.
இனிமேலும் சேரமாட்டார்கள். பாதை தவறி சென்றவர்களால் சரியான அரசியல் பாதையை அமைத்து கொடுக்க முடியாது.கரூர் சம்பவத்துக்கு முன் விஜய் பேச்சுக்கும், கரூர் சம்பவத்துக்கு பின்பு அவரது பேச்சுக்கும் நிறைய மாறுபாடு ஏற்பட்டுள்ளது. தொண்டர்களின் நம்பிக்கையை பெற முழு கவனமாக பேசுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.