61-வது முறையாக திருட்டில் ஈடுபட்டவர் கைது

பொள்ளாச்சி பகுதியில் கைவரிசை காட்டிய போது, 61-வது முறையாக திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-03-02 00:15 IST

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி பகுதியில் கைவரிசை காட்டிய போது, 61-வது முறையாக திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போலீசார் ரோந்து

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி, போலீஸ்காரர் கோட்டைச்சாமி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சென்ற போது, அந்த வழியாக வந்த மொபட்டை போலீசார் நிறுத்தினர். ஆனால், மொபட்டில் வந்த நபர் நிற்காமல் சென்றார்.

இதையடுத்து போலீசார் விரட்டி சென்று அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த லட்சுமணன் (வயது 44) என்பது தெரியவந்தது. மேலும் நேற்று முன்தினம் நெகமம் போலீஸ் நிலையத்தில் உள்ள திருட்டு வழக்கில் ஆஜராவதற்காக பொள்ளாச்சி கோர்ட்டுக்கு வந்து உள்ளார். அப்போது அரசு ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டு இருந்த மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது.

61-வது முறையாக திருட்டு

மேலும் புளியம்பட்டியில் உள்ள டீக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1,270 மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் கொண்ட ஹார்டிஸ்க் போன்றவற்றை திருடி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மொபட் மற்றும் முகமூடி, கத்தி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையில் கைதான லட்சுமணன் கடந்த 25 ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருகிறார். சின்ன, சின்ன திருட்டு வழக்குகளில் பெரும்பாலும் புகார் கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சிறிய அளவிலான திருட்டில் மட்டும் ஈடுபட்டு வந்து உள்ளார். பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடியதே அதிக மதிப்பு கொண்ட திருட்டு ஆகும். தற்போது 61-வது முறையாக திருட்டில் ஈடுபட்ட போது அவர் சிக்கியது குறிப்பிடத்தக்கது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்