தமிழகத்தில் ஆட்சி தான் மாறியுள்ளது காட்சி மாறவில்லை பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழகத்தில் ஆட்சிதான் மாறியுள்ளது, காட்சி மாறவில்லை என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்

Update: 2022-06-09 17:27 GMT

நெல்லிக்குப்பம்

7 பேர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே ஏ‌.குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற 7 பெண்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நீரில் மூழ்கி பலியான அயன் குறிஞ்சிப்பாடி மற்றும் ஏ.குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கழிப்பறை வசதி இல்லை

கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் எப்படி இறந்தார்கள் என்பது தான் முக்கியமான விஷயமாகும். ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததால் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதை அரசு சார்பில் மூடவில்லை.

மேலும் இந்த பகுதியில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் மக்கள் ஆற்று பகுதிக்கு சென்றுள்ளதால் தண்ணீரில் மூழ்கி 7 பேர் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் மிகவும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் எங்கும் நடைபெறாத வகையில் தமிழக அரசு முழுவீச்சில் நடவடிக்கை பணிகள் மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து கெடிலம் ஆற்று பகுதியில் உள்ள பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும்.

ரூ.10 லட்சமாக...

தமிழக அரசு இறந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கியதை ரூ.10 லட்சமாக உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும். மேலும் வீட்டில் ஒருவருக்கு இதே பகுதியில் அரசு வேலை வழங்க வேண்டும். இந்த பகுதியில் இறந்த 7 பேர் நினைவாக அரசு சார்பில் நினைவு தூண் அமைக்க வேண்டும்.

நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஆட்சி எப்படி உள்ளது? என்று கேட்டு வருகின்றனர். ஆனால் ஆட்சிதான் மாறியுள்ளது, காட்சி மாறவில்லை. மக்களுக்காக ஒதுக்கக் கூடிய நிதி அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தான் சென்று கொண்டிருக்கிறது.

தே.மு.தி.க. தலைவராக...

தமிழகத்தில் உள்ள தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள், நான் தே.மு.தி.க. தலைவராக வரவேண்டும் என தெரிவித்துள்ளனர். தற்போது ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் கூட்டம் 4 நாட்கள் தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது. இதன் பிறகு உள்கட்சித் தேர்தல் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று அதன்பிறகு தலைவர் விஜயகாந்த் என்ன கூறுகிறாரோ அதுதான் இறுதி முடிவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம், மாவட்ட துணை செயலாளர் ராஜ், ஒன்றியக்குழு துணைத் தலைவர்கள் ஜான்சிராணி, அய்யனார், ஒன்றிய செயலாளர் தென்னரசு, நகர செயலாளர்கள் கஜேந்திரன், சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்