மாணவர் விடுதியை சீரமைக்க வேண்டும்
கோட்டூரில் உள்ள மாணவர் விடுதியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.;
பொள்ளாச்சி,
கோட்டூரில் உள்ள மாணவர் விடுதியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
வீட்டுமனை பட்டா
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது சிறுகளந்தை அரிஜன காலனி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிணத்துக்கடவு தாலுகா சிறுகளந்தை அரிஜன காலனியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றோம். கூட்டுக்குடும்பமாக மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வசிக்கிறோம். எனவே, எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தூய்மை பணியாளர்கள்
கோவை மாவட்ட கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் விடுதலை முன்னணியினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட அரசிதழில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலித்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்தில் இருந்து நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ஆனால், மேற்கண்ட உத்தரவை மறைத்து ஒப்பந்ததாரர்கள் தூய்மை பணியாளர்களுக்கு கூலி தொகையை வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே, விசாரணை நடத்தி கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மாணவர் விடுதி
மாணவர் இளைஞர் இயக்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கோட்டூர் திருவள்ளுவர் காலனி பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தொலைதூர கிராமம் மற்றும் மலைப்பகுதியை சார்ந்த மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் மாணவர் விடுதி ஏற்படுத்தப்பட்டது. இந்த விடுதியை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் அதிகமாக பயன்படுத்தி வந்தனர். அரசு விடுதியை சரிவர பராமரிக்காததால் தங்கி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
தற்போது விடுதி புதர்மண்டி கிடக்கிறது. எனவே மாணவர் விடுதியை முழுமையாக புனரமைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.