வால்பாறையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை;வீடுகள் இடிந்து விழுந்தன

வால்பாறையில் விடிய, விடிய மழை பெய்து கொட்டித்தீர்த்தது. இதில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன.

Update: 2023-10-01 18:45 GMT

வால்பாறை: வால்பாறையில் விடிய, விடிய மழை பெய்து கொட்டித்தீர்த்தது. இதில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

வடகிழக்கு பருவமழை

வால்பாறை பகுதியில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரை பெய்ய வேண்டிய தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால் அவ்வப்போது லேசானது முதல் கனமான மழை பெய்து வந்தன. மழைப்பொழிவு குறைவு காரணமாக பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 100 அடி மட்டுமே எட்டிய நிலையில் குறைய தொடங்கிவிட்டது.

இதையடுத்து தற்போது தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இதனால் கடந்த 2 கடந்த நாட்களாக வால்பாறை பகுதியில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்படுத்தி தரக்கூடிய கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, வெள்ளமலை டனல் ஆறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதில் நடுமலை ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 76 அடியை தாண்டியது. அணைக்கு வினாடிக்கு 2,051 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் வரட்டுப்பாறை தடுப்பணை நிரம்பி வழிகிறது.

விடிய, விடிய மழை

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வால்பாறையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தன. இரவு பெய்யத்தொடங்கிய மழை நேற்று காலை விடிய, விடிய தொடர்ந்து பெய்தது. தொடர்ந்து மதியம், இரவு வரை விட்டுவிட்டு பெய்தது.

தொடர் மழை காரணமாக நேற்று அதிகாலை நேரத்தில் வால்பாறை அண்ணா நகர் பகுதியில் உள்ள 2 வீடுகள் அதிகாலை இடிந்து விழுந்தன. இந்த சமயத்தில் வீடுகளில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும் மழை காரணமாக சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கின. தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் தஞ்சம் அடைந்தன. முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறையில் நேற்று சந்தை நாளாக இருந்ததால் கொட்டும் மழையிலும் வேறு வழியின்றி குடைபிடித்தபடி கடும் சிரமத்தி்ற்கு மத்தியில் வந்து தங்களது வீடுகளுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். மேலும் வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகளும் மழையால் பாதிக்கப்பட்டனர். தொடர் மழை காரணமாக பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வெளியே செல்லாமல் தங்களது விடுதி அறைகளிலேயே முடங்கி கிடந்தனர். மொத்தத்தில் வால்பாறையில் மழைக்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்