கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த கிராம மக்கள்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு இலவச வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் மனு கொடுக்க திரண்டு வந்தனர்.

Update: 2023-03-20 19:15 GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விசாகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர். தமிழ் சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சீலப்பாடி ஊராட்சி பகுதியில் முறையாக குப்பைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் தாண்டிக்குடியை சேர்ந்த கணேஷ்பாபு என்பவர் கொடுத்த மனுவில் ஆடலூர் ஊராட்சியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிலக்கோட்டை தாலுகா பச்சமலையான் கோட்டையை அடுத்த சி.கூத்தம்பட்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சி.கூட்டம்பட்டியில் 950-க்கு மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கிறோம். பல ஆண்டுகளாக வீடு இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே பச்சமலையான்கோட்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சார்பில் சிலரை மட்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 280 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்