நிற்காமல் சென்றதை தடுத்தபோது போலீஸ் ஏட்டுவை மோட்டார் சைக்கிள் மக்கார்டில் வைத்தபடி ஓட்டி சென்ற வாலிபர்கள்

நெல்லையில் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நிற்காமல் சென்றதை தடுத்த போலீஸ் ஏட்டுவை அவர்கள் மோட்டார் சைக்கிள் மக்கார்டில் வைத்தபடி ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-08-10 21:59 GMT

நெல்லை மாநகர பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்கள், உரிய சான்றிதழ்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குகிறவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுகிறவர்களுக்கு அபராத கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், சில இடங்களில் போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பொன்னாக்குடி பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விலை உயர்ந்த ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீஸ் ஏட்டு சீனிவாசன் சைகை காண்பித்தார். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

உடனே ஏட்டு சீனிவாசன், மோட்டார் சைக்கிளின் முன்பாக நின்று மறித்தார். இதையடுத்து அந்த வாலிபர்கள், ஏட்டு மீது மோட்டார் சைக்கிளை மோதி விட்டு தப்பிச் செல்ல முயன்றனர். இதனால் சுதாரித்துக்கொண்ட ஏட்டு சீனிவாசன், மோட்டார் சைக்கிளின் முன்புற மக்கார்டு பகுதியில் அமர்ந்து கொண்டு இறுக பிடித்துக் கொண்டார். எனினும் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சிறிது தூரம் ஓட்டி சென்றனர்.

உடனே அங்கிருந்த மற்ற போலீசார் விரட்டி சென்று, பாளையங்கோட்டை மத்திய சிறை வாசல் அருகில் மோட்டார் சைக்கிளை மறித்து ஏட்டுவை மீட்டனர். இதில் ஏட்டு சீனிவாசன் கால்களில் காயமடைந்தார். இதையடுத்து அந்த நபர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து, பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்