தூத்துக்குடி பனிமய மாதா ஆலய சப்பர பவனி
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய 440-வது ஆண்டு திருவிழாவில் சப்பர பவனி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.;
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய 440-வது ஆண்டு திருவிழாவில் சப்பர பவனி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பனிமயமாதா ஆலயம்
ஏழுகடல் துறையுடன் எல்லோருக்கும் ஏக அடைக்கலத்தாயாக தூத்துக்குடியில் எழுந்தருளி அன்போடு ஆட்சி புரியும், திருமந்திர நகர் பனிமய மாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு 440-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடந்து வந்தது.
மாலை ஆராதனை
திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் அன்னையின் சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது.
சப்பர பவனி
மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. திருவிழாைவயொட்டி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.