நாட்டு வெடிகுண்டு வீசி கொலை மிரட்டல்; 2 பேர் கைது

விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-16 18:45 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாலன் மகன் கிருஷ்ணராஜ் (வயது 39). இவருடைய தாய் விஜயலட்சுமி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த 14-ந் தேதி இரவு கிருஷ்ணராஜ் , அதே கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே உள்ள மேம்பாலம் அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கபிலன் (36) என்பவர் கிருஷ்ணராஜை வழிமறித்து பொங்கல் செலவுக்கு ரூ.5 ஆயிரம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு கிருஷ்ணராஜ், தன்னிடம் பணம் எதுவும் இல்லை எனக்கூறியுள்ளார். உடனே கபிலன், கிருஷ்ணராஜின் கழுத்தில் கத்தியை வைத்து சட்டைப்பையில் இந்த ரூ.1,000-த்தை பறித்துச்சென்றார். உடனே கிருஷ்ணராஜ், கூச்சல்போடவே கபிலனுடன் வந்த அவரது உறவினரான புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த கோபால் மகன் கவுதம் (23) என்பவர் 2 நாட்டு வெடிகுண்டுகளை சாலையில் வீசி அதை வெடிக்கச்செய்ததோடு கிருஷ்ணராஜை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கிருஷ்ணராஜ், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபிலன், கவுதம் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த வீச்சரிவாள், செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்