திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-09 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தை உத்திர வருசாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தை உத்திர வருசாபிஷேகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர நட்சத்திரமான நேற்று மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளாகும். இதையொட்டி கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை கும்பங்களுக்கும், குமரவிடங்கப்பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் பூஜைகள் நடத்தப்பட்டது.

புனித நீர் அபிஷேகம்

காலை 9 மணிக்கு பூஜை செய்யப்பட்ட கும்ப கலசங்கள் விமானதளத்திற்கு கொண்டு வரப்பட்டது. 9.24 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷம் எதிரொலிக்க மூலவர், சுவாமி சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடத்தப்பட்டது.

வீதி உலா

பின்னர், சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரவில் மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.

இந்த விழாவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்