திருப்பூர்: "செல்பி வித் அண்ணா" போட்டி - கல்லூரி மாணவிகளிடையே பாஜக மகளிர் அணியினர் வாக்குவாதம்

திருப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையை ஒட்டி, திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-15 11:41 GMT

வீரபாண்டி,

பாஜகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் "செல்பி வித் அண்ணா" என்ற போட்டி நடைபெற உள்ளதாகவும், அதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக் கொள்ளலாம் எனவும், பாஜகவில் இணைந்து தேசத்தின் கரத்தை வலுப்படுத்த வாருங்கள் எனவும், இதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் அங்குள்ள இரண்டு கல்லூரிகள் முன்பாக நடத்தப் போவதாக தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெறுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரத்தை அறிந்த இரண்டு கல்லூரி முதல்வர்களும் இதற்கும் தங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும் தங்களிடம் அனுமதி பெறப்படாமல் கல்லூரியின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் மூலமாக விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள கல்லூரிக்கு சென்ற பாஜகவினர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் முன்பக்க கதவை திறக்காமல் பின் வழியாக தேர்வு முடிந்த மாணவிகளை வெளியே அனுப்பினர். இந்த தகவலை அறிந்த பாஜகவினர் கல்லூரிக்குள் நுழைந்து பேராசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாஜக கட்சியினர், திருப்பூர் தெற்கு போலீசார் உதவியுடன் முன் பக்க கதவுகளை திறக்க வலியுறுத்தினர். அதன் பிறகு கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவிகளிடம் பாஜகவினர் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சில மாணவிகள் கல்லூரி சமயங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளால் இடையூறுகள் ஏற்படுவதாகவும் தங்களால் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இதனால் பாஜக மகளிர் அணிக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் இடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்