சிறு,குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணத்தில் சலுகை - அமைச்சர் செந்தில்பாலாஜி

சிறு குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்று கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Update: 2022-08-23 21:42 GMT

அமைச்சர் ஆய்வு

கோவை ஈச்சனாரி பகுதியில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக ஈச்சனாரியில் மேடை, பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார். பின்னர் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் இன்று நடைபெறும் முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் இருக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். எனவே எந்த இடங்களிலும் கொடிகள் தோரணங்கள் அலங்கார வளைவுகள் வைக்கப்படவில்லை. இது எளிமையான, மக்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சியாக இருக்கும்.

கட்டணத்தில் சலுகை

மின்கட்டண உயர்வு குறித்து தமிழகத்தை சேர்ந்த சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழில் முனைவோர்கள் உயர்த்தப்பட்ட எச்.டி.மின்சார லைனுக்கான டிமாண்ட் சார்ஜ் (கேட்பு கட்டணம்), தாழ்வழுத்த இணைப்புக்கான பிக்சடு சார்ஜ் (நிலைக்கட்டணம்) ஆகியவற்றை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கட்டணத்தில் சலுகை வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் கண்டிப்பாக மின்சார வாரியம் பரிசீலிக்கும்.

இது தொடர்பாக ஓரிரு நாளில் நிர்ணய கட்டணத்தை இறுதி செய்து ஒழுங்குமுறை ஆணையம் தாக்கல் செய்யும். இழப்புகளை சரிசெய்யும் சூழ்நிலைக்கு மின்சார வாரியம் தள்ளப்பட்டு இருக்கிறது. மின்கட்டண உயர்வில் சலுகைகள் கொடுக்கும் அளவுக்கு மின்சார வாரியம் இல்லை. எனவே வீடுகள், கடைகள் உள்பட அனைவருக்கும் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வில் மாற்றமில்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட கேட்பு கட்டணம், நிலைக்கட்டணத்தில் மட்டுமே சலுகை வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்